ஓகி புயல் தாக்கி 5 ஆண்டு நிறைவு; குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைவது எப்போது?.. ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாகர்கோவில்: ஓகி புயலின் 5ம் ஆண்டு தினத்தையொட்டி, குமரி கடற்கரை கிராமங்களில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடலில் மாயமாகும் மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைதி, பொறுமையாக இருக்கும் இயற்கை திடீரென பொங்கி எழுந்து கோர தாண்டவம் ஆடினால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும்? என்பதை உணர்ந்த மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாகும். ஒவ்வொரு பருவமழைக்காலத்திலும் 1992 ல் பெய்த மழை, இந்த மாவட்ட மக்களுக்கு நினைவுக்கு வந்து செல்லும்.

ஆனால் அந்த மழையை மிஞ்சும் அளவிற்கு பருவமழைகளும், புயல் மழைகளும் அவ்வப்போது குமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டு இருக்கிறது. அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி இந்திய பெருங்கடலில் தொடங்கி அரபிக்கடல் வழியாக பயணித்து பலத்த காற்றை வீசிச்சென்ற ‘ஓகி’ புயல்தாக்கத்தின்போது குமரி மாவட்ட கடலோர பகுதிகளும், , மலையோர பகுதிகளும் பேரழிவை சந்தித்தன. லட்சக்கணக்கான மரங்கள் முறிந்தன. பல மலை கிராமங்கள் அடியோடு துண்டிக்கப்பட்டன. மின் கம்பங்கள் முறிந்து மாவட்டமே இருளில் மூழ்கி தத்தளித்தது. புயல் தாக்குதலில் சிக்கி 224 மீனவர்கள் பலியானார்கள்.

இன்னும் பலர் மாயமான பட்டியலில் உள்ளனர். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதியிலும் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். ஓகியில் சாய்ந்த மரங்கள் கூட இன்னும் வனப்பகுதியில் அகற்றப்படாமல் அதன் சுவடுகளை நினைவூட்டிக் ெகாண்டே இருக்கிறது. அந்த வகையில், ஓகி புயலின் 5ம் ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலோர கிராமங்களில், ஓகி புயலுக்கு பலியான மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் மலர் தூவினர். மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஓகி புயல் தாக்குதலை தொடர்ந்து மீனவர்கள் தரப்பில் ஒன்றிய அரசுக்கும், அப்போதைய மாநில அரசுக்கும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. அவற்றில் மிக முக்கியமான கோரிக்கையில், ஹெலிகாப்டர் தளம் மிகவும் முக்கியமானதாகும். கடலில் மாயமாகும் மீனவர்களை விரைந்து தேடி கண்டுபிடிக்கும் வகையில் கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட வேண்டும் என மீனவர்கள் பிரதமர் மோடியிடமும், அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடமும் வலியுறுத்தினர். அவர்களும் இந்த கோரிக்கையை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்றி தரும் என உறுதி அளித்தனர். ஆனால் இன்னும் அந்த கோரிக்கை என்பது மீனவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

ஆண்டுதோறும் கடலில் மாயமாகி மீனவர்கள் உயிரிழப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.  மாயமாகும் மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்கும் வகையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் கோரிக்கையாவது உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: