சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது: கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த 2018ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பெரும் சேதமானது. வாகனங்களை நிறுத்தும் இடங்களும் சேதமடைந்தன. இதனால் கடந்த சில வருடங்களாக பம்பையில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பையிலிருந்து சுமார் 21 கிமீ தொலைவிலுள்ள நிலக்கல்லில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். இங்கிருந்து பம்பை செல்ல கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பம்பையில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதாக கேரள உயர்நீதிமன்றத்திற்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து பம்பையில் எக்காரணத்தை கொண்டும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என்று நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் அஜித்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. 2 கிமீ தொலைவு வரை க்யூ: இந்நிலையில் சபரிமலையில் தற்போது கொரோனாவுக்கு முந்தைய வருடங்களில் இருந்ததை போல பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக தினமும் சராசரியாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 28ம் தேதி 84 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த சில தினங்களாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது பக்தர்களின் வரிசை மரக்கூட்டம் மற்றும் சரங்குத்தி பகுதியை தாண்டி சுமார் 2 கிமீ தொலைவு வரை காணப்படுகிறது.

இதனால் பக்தர்கள் 10 மணிநேரத்திற்கும் மேல் காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (30ம் தேதி) காலை வரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். டிரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி: பிரபல இசை கலைஞரான டிரம்ஸ் சிவமணி சபரிமலை ஐயப்பனின் தீவிர பக்தர். வருடம்தோறும் இருமுடி கட்டி சபரிமலை சென்று தரிசனம் செய்வது வழக்கம். இவ்வருடமும் நேற்று சிவமணி சபரிமலை வந்து ஐயப்பனை தரிசித்தார். இதன் பின் சன்னிதானத்திலுள்ள அரங்கத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். சபரிமலை வந்த ஏராளமான பக்தர்கள் இந்த இசை நிகழ்ச்சியை மிகவும் ரசித்தனர்.

Related Stories: