நண்பர்களுக்கு கறி விருந்து இல்லையா? திருமணமே வேண்டாம்: மணமகன் அடாவடி: மணமகளின் பெற்றோர் அதிர்ச்சி

திருமலை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்களுக்கு கறி விருந்து இல்லாததால் திருமணமே வேண்டாம் என கூறிவிட்டு மணமகன் சென்றதால் மணமகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஜெகத்கிரிகுட்டா ரிங் பஸ்தி என்ற பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும், குத்புல்லாபூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர் மற்றும் பெரியோர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக நடந்தது.

நிச்சயித்தபடி கடந்த திங்கள்கிழமை திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மாப்பிள்ளை வரவேற்பு நிகழ்ச்சி மணமகளின் வீட்டில் எளிமையாக திட்டமிட்டபடி நடந்தது. இதில் மணமகன் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அங்கு பெண் வீட்டார் சார்பில் தயாரிக்கப்பட்ட அறுசுவை விருந்து பறிமாறப்பட்டது. ஆனால் கறி விருந்து இல்லையா என மணமகனின் நண்பர்கள் சிலர் கேட்டுள்ளனர். அதற்கு மணமகளின் தரப்பினர் நாங்கள் சைவம், அதனால் கறி விருந்து இல்லை என்று கூறியுள்ளனர்.

இதைக்கேட்ட மணமகனின் தரப்புக்கும், மணமகளின் தரப்புக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மணமகனின் நண்பர்கள் சாப்பிடாமல் அங்கிருந்து வெளியேறினர். இதில் மனமுடைந்த மணமகன், பெண் வீட்டாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் விருந்து உபசரிப்பு தெரியாதவர்கள் வீட்டில் இருந்து பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை எனக்கூறி திருமணத்தை நிறுத்துவதாக கூறினார். இதைக்கேட்டு மணமகளின் உறவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜெடிமெட்லா போலீஸ் நிலையத்தில் மணமகளின் தரப்பினர் புகார் அளித்தனர்.

 இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து இருதரப்பினருக்கும் அறிவுரை கூறினர். இதையேற்று நிறுத்தப்பட்ட திருமணத்தை 30ம்தேதி (இன்று) நடத்துவது என்று இருதரப்பினரும் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை திருமணம் நடந்தது. கறி விருந்து கேட்டதில் ஏற்பட்ட தகராறில், திருமணம் நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் நடந்தது அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories: