கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; சாட்சிகள், குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை: சிபிசிஐடி அதிகாரிகள் தகவல்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேவைப்பட்டால் சாட்சிகள், குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாக்கள் உள்ளன. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொள்ளை கும்பல் நுழைந்தது. அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பங்களாவிற்குள் நுழைந்து சில ஆவணங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை திருடி சென்றது.

இது தொடர்பாக சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து நீலகிரி மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், ஐஜி சுதாகர் மேற்பார்வையில் இந்த விசாரணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் சசிகலா உட்பட 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் முதற்கட்டமாக விசாரணையை துவக்கியுள்ளனர்.

இவர்கள் கொடநாட்டில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தற்போது சிபிசிஐடி எஸ்பி மாதவன் தலைமையில் கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சந்திரசேகர் உள்பட 49 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வரும் காலங்களில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். விசாரணையை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்தே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

கோவைக்கு வர முடியாத சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் இருந்தால் மட்டும் நீலகிரியில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது விசாரணை துவங்கி நடந்து வருகிறது. தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தால், சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

Related Stories: