×

சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்..!!

சென்னை: சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன், நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிபடுத்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த  செப்டம்பர் 14 அன்று கலைவாணர் அரங்கத்தில் ‘சிற்பி‘ என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்து, சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியும், இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிற்பி திட்டத்தின் சீருடைகளையும் வழங்கியும் வாழ்த்தினார்.

காவல்துறையுடன், பள்ளி மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும், பொறுப்பு மிக்க மாணவர்களை உருவாக்குவதே சிற்பி திட்டத்தின் தலையாய நோக்கமாக இருந்து வருகிறது. மேலும், பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கி, சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடாமல் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவர்களை நல்வழிபடுத்தவும், நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டு, தாம் கற்ற கல்வியையும், ஒழுக்கத்தையும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை வளர்ப்பதற்கும், சிற்பி திட்டம் துவங்கப்பட்டது.

சிற்பி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவர்கள் வீதம், அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் 2,764 மாணவர்கள் மற்றும் 2,236 மாணவிகள் என மொத்தம் 5,000 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டும், ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டும், ஒவ்வொரு பள்ளியிலும் வாரந்தோறும் புதன்கிழமை மேற்படி மாணவ, மாணவிகளுக்கு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கல்வி சுற்றுலாவாக முக்கிய இடங்களுக்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், காவல்துறையின் பணிகள், கடமைகள், பொதுமக்கள் தொடர்பு குறித்து எடுத்துரைத்து, மாணவ, மாணவிகள், காவல்துறையின் அங்கமாக செயல்படவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி மாணவர்களின் சிறந்த வழிகாட்டியான ’சிற்பி திட்டத்தை மேம்படுத்தவும், மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தவும், தேசப்பற்று அதிகரிக்கவும், இன்று காலை, மேற்கு தாம்பரத்திலுள்ள ஶ்ரீசாய்ராம் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லுரி வளாகத்தில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சிற்பி திட்டத்தின் மாணவ, மாணவியர்களுக்கான MOTIVATIONAL SESSION ON PATRIOTISM என்ற தலைப்பில் தேசப்பற்று ஊக்குவிக்கும் ஒரு நாள் கருத்தரங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் பத்மஶ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) இராணுவ விஞ்ஞானி முனைவர் V.டில்லிபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிற்பி திட்டத்தின் அம்சங்கள் குறித்தும், நாட்டுப்பற்று குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப, (தலைமையிடம்), இணை ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் B.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, பள்ளி ஆசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் சிற்பி திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  


Tags : Minister ,Love Magesh , Sculptor Project, Patriotism, Awareness Program, Anpil Mahesh
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...