டிவிட்டரில் காவல்துறை குறித்து அவதூறு பதிவு: 15 நாட்களில் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சாதனை

* குற்றவாளிக்கு நீதிமன்றம் 17 நாள் சிறை தண்டனை,

* 6,500 அபராதம் விதிப்பு

சென்னை: தமிழக காவல்துறை குறித்து டிவிட்டர் பக்கத்தில் அவதூறு பதிவு செய்த வழக்கில் 15 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றவாளிக்கு 48 நாட்களில் 17 நாட்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6500 அபராதம் பெற்று தந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாதனை படைத்துள்ளனர். தமிழக காவல் துறை குறித்தும், தமிழக முதல்வர் குறித்தும் அவதூறாக வகையில் டிவிட்டர் பக்கத்தில் அரவிந்த நடராஜன் என்பவர் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். இதுகுறித்து திமுக ஐடி பிரிவு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிவிட்டர் பதிவுகளுடன் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த அரவிந்த்(39) என்றும், பி.எஸ்.சி பட்டதாரியான இவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது வேலை இல்லாமல் இருந்த அரவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக காவல்துறை குறித்தும், தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதிவு செய்து இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் அரவிந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கடந்த மாதம் 12ம் தேதி கைது செய்தனர்.

அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்த அவதூறு பதிவும் நீக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து முடித்து 15 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து 48வது நாளில் குற்றவாளி அரவிந்துக்கு நீதிமன்றம் 17 நாட்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அதைதொடர்ந்து குற்றவாளியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 48 நாட்களில் வாக்கு விசாரணை முடித்து தண்டனை பெற்று தந்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: