காஞ்சியில் நவீன வசதிகளுடன் முன்மாதிரி ரேஷன் கடை: தமிழக அரசு அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில்  நவீன வசதிகளுடன்  கட்டப்பட்ட ரேஷன் கடையை முன்மாதிரி ரேஷன் கடை என தமிழக அரசு அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது வார்டு கணேஷ்நகரில், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹15.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையில் எந்த நேரமும் ஸ்மார்ட் கார்டு வேலை செய்யும் வகையில் வைஃபை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி வழி பாதை, மழைநீர் சேகரிப்பு, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் முன்மாதிரி ரேஷன்  கடையாக கட்டப்பட்டுள்ளது. மேலும் புராதன சின்னங்கள் வரையப்பட்ட வண்ண வண்ண ஓவியங்கள், திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்ட முகப்பு சுவர் விளம்பரங்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் நிதியுடன் கூடுதலாக தனது சொந்த செலவில் 48வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் ரேஷன் கடை கட்டியது சிறப்பானது.

முன்மாதிரி ரேஷன் கடை மாவட்டத்தில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் 2252 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்படும் என அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் கணேஷ் நகரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட ரேஷன் கடையை முன்மாதிரி ரேஷன் கடையாக தமிழக அரசு அறிவித்துள்ளதால் சமூக ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: