×

நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்

இந்திய மக்கள் தொகையை பொறுத்தவரை சுமார் 25 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினரும் உள்ளனர் என்பது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. உயர் ரத்த அழுத்தமானது உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதற்கான முன்னோடி நோயாக உள்ளது. இந்த நோயை கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காதவர்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள்.

இது ரத்த நாள பிரச்னையில் துவங்கி மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய்களில் சென்று முடிவடைகிறது. உயர் ரத்த அழுத்த நோயை கண்டறிய முறையான பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதேபோல் உணவு கட்டுப்பாடும் மிகவும் அவசியமாகும். உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

தினந்தோறும் 30 முதல் 40 நிமிடங்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதேபோல் அதிக மன அழுத்தம் இல்லாத வகையில் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதும் கட்டாயம் ஆகும். குழந்தை பருவத்திலும் பல்வேறு காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதோடு, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

இவை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் ஆகும். எனவே உயர் ரத்தம் அழுத்தம் ஏற்படாமல் தடுக்க தினந்தோறும் வழக்கமான உடற்பயிற்சி, காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது போன்ற பல நல்ல பழக்கங்களை குழந்தை பருவம் முதலே வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு இருதய சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் இந்த தொற்று நோய் காலத்தில் தங்களின் வீடுகளிலேயே ரத்த அழுத்த அளவை பரிசோதனை செய்து கொள்வதோடு அதற்கு முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வது கட்டாயம் ஆகும்.  உயர் ரத்த அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்போது இந்த நோய் பாதிப்பின் தாக்கமானது வெகுவாக குறையும். எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தை துல்லியமாக கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்தி நீண்ட காலம் வாழ முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.   

Tags :
× RELATED One Nation! One Election!! One Vote!!! - கவிஞர் சல்மா கிண்டல் பதிவு