மாநகராட்சி பகுதிகளில் விரைவில் வருகிறது; வீடுகளை தேடி நடமாடும் காய்கறி விற்பனை நிலையம்: உழவர் சந்தைகளில் இருந்து நேரடியாக அனுப்ப ஏற்பாடு

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளை தேடி நடமாடும் காய்கறிகள் விற்பனை நிலையங்கள் வரவுள்ளது. இதில் உழவர் சந்தைகளில் இருந்து நேரடியாக காய்கறிகள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பாதிப்பு பரவ தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனால் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்ய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வாகனங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், நடமாடும் காய்கறி கடைகள் நிறுத்தப்பட்டது. ஆனால், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டமன்ற கூட்டத்தொடரில் கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட நடாடும் விற்பனை முறையானது, வேலை வாய்ப்பை அளிப்பதோடு, நுகர்வோர்களுக்கும் பயனடையும் வகையில் இருந்தது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை அதே நடமாடும் விற்பனை திட்டம் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பண்ணையில் இருந்து வீடுகளுக்கு பசுமை காய்கறிகள் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, முதற்கட்டமாக, சென்னை, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய 5 மாநகராட்சிகளில் செயல்படுத்தபடவுள்ளது. ஒவ்வொரு மாநகராட்சி பகுதிக்கும் தலா 6 வாகனங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் நேரடியாக தினமும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து சேலம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் பாலசுப்பரமணியம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை இடைதரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காலத்தில் உழவர் சந்தையின் விலையிலேயே மக்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ததில், நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதேபோல தமிழகத்தில் 5 மாநகராட்சிகளில் நடமாடும் காய்கறி விற்பனை கடைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் மினிடெம்போக்களில் வைத்து நடமாடும் கடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆர்வமுள்ள 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் மதிப்பில் தலா ரூ.2 லட்சம் அல்லது வாகனத்தின் விலையில் 40 சதவீதம் என்று எது குறைவாக உள்ளதோ அது மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள், பழங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், எண்ணெய் வகைகள் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும்.

நடமாடும் காய்கறி வாகனத்தில் டிஜிட்டல் எடை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், அன்றைய தினம் காய்கறிகளின் விலை பட்டியலும் அந்த வாகனத்தில் இடம் பெறும். இதனால் நுகர்வோர் பேரம் பேச வேண்டிய நிலை ஏற்படாது. இதில் 6 வாகனங்களுக்கும் ஒரு உழவர் சந்தை பிரித்து கொடுக்கப்படும். இந்த உழவர் சந்தைகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் நேரடியாக பெறப்பட்டு, வீடு தேடி சென்று விற்பனை செய்யப்படும். இதன் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் வருமானத்தை பெருக்கவும், மற்ற விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் வருமானத்தை பெருக்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள், பழங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், எண்ணெய் வகைகள் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும்.

Related Stories: