டியாங்காங் விண்வெளி நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்: மேலும் 3 வீரர்களை வெற்றிகரமாக விண்ணில் அனுப்பியது சீனா..!!

பெய்ஜிங்: விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளுக்கு மேலும் 3 வீரர்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் அனுப்பியுள்ளது. சீனாவின் விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்காக 3 ஆய்வக தொகுதிகளை அனுப்பி, இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகளை முடிக்க சீனா முயற்சித்து வருகிறது. விண்வெளி கட்டுமானப் பணிக்கு கடந்த ஜூன் மாதம் ஷென்சோ - 14 குழுவை சீனா விண்வெளிக்கு அனுப்பி இருந்த நிலையில், இன்று மேலும் 3 வீரர்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் அனுப்பியுள்ளது. வடமேற்கு சீனாவில் உள்ள ஜிகுவாங் செயற்கைகோள் ஏவுதள மையத்தில் இருந்து ஷென்சோ - 15 விண்கலத்துடன் இணைந்த ஒய் - 15 கரியர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு 3 வீரர்களை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பியது.

விண்வெளிக்கு சென்றுள்ள ஷென்சோ - 15 குழுவை சேர்ந்த வீரர்கள், ஏற்கனவே அங்கு தங்கியுள்ள 3 வீரர்களுடன் இணைந்து கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் இருக்கும் விண்வெளி நிலையத்தில் 6 விண்வெளி வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கி இருப்பது இதுவே முதல்முறையாகும். ஒரு வாரத்திற்குள் கட்டுமான பணிக்கான திட்ட அறிக்கையை கொடுத்துவிட்டு ஏற்கனவே தங்கியிருக்கும் 3 வீரர்களும் ஷென்சோ - 15 விண்கலம் மூலம் டிசம்பர் மாத தொடக்கத்தில் பூமிக்கு திரும்ப உள்ளனர். மேலும் சீன விண்வெளி ஆய்வு வரலாற்றில் வீரர்கள் மாற்றிக்கொள்ளப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Related Stories: