போச்சம்பள்ளியில் இடைப்பருவ மா விளைச்சல் அதிகரிப்பு: சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி அளிக்க வலியுறுத்தல்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் இடைப்பருவ மா விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனை விற்பனை செய்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா சாகுபடிக்கு சீதோஷ்ண நிலை சாதகமாக உள்ளதால் அல்போன்சா, தோத்தாபுரி, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தோத்தாபுரி ரகம் 60 சதவீதமும், செந்தூரா மற்றும் நீலம் ரகங்கள் 30 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டாக மழை குறைவு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைவால் மா தென்னை, விவசாயம் அழிவு பாதையில் சென்றது.

இதனால், வெளி மாநிலங்களுக்கு மாங்காய்களை விற்பனைக்கு அனுப்பினாலும் போதிய வருவாயின்றி விவசாயிகள் கலக்கம் அடைந்தனர். ஆண்டுதோறும் மா விளைச்சல் அதிகரித்தாலும் உரிய விலை கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதனால், விவசாயிகள் மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விற்று வந்தனர். அதனைத்தொடர்ந்து போச்சம்பள்ளி பகுதியில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இரட்டிப்பு லாபம் தரும் இடைப்பருவ மா சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பருவ காலத்தில் கிடைக்கும் வருவாயை காட்டிலும் இடைப்பருவ காலத்தில் கிடைக்கும் மகசூல் மூலம் பல மடங்கு வருவாய் ஈட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து மா விவசாயி ஞானமூர்த்தி கூறியதாவது:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக இடைப்பருவ மா சாகுபடி செய்து வருகிறோம். தற்போது, சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்துள்ளோம். இடைப்பருவ  சாகுபடி மூலம் செந்தூரா, பெங்களூரா மற்றும் அல்போன்சா பழ ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளோம். வழக்கமாக ஒரு டன் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ஆனால், இடைப்பருவ காலத்தில் சாகுபடி செய்யப்படும் மாங்காய்க்கு 5 முதல் 10 மடங்கு வரை அதிக விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைப்பருவ மாங்காய் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளிடம் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயிற்சி வழங்க வேண்டும். சொட்டுநீர் பாசனம், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: