திருமூர்த்தி மலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

உடுமலை:  சபரிமலை சீசன் துவங்கியதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான திருமூர்த்தி மலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான திருமூர்த்தி மலை, அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி போன்றவற்றுக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். மேலும் தற்போது சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் சபரிமலை செல்லும் வழியில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.

பக்தர்களில் பலர் ஐயப்பன் கோயிலுக்கு சென்ற பின்பு புண்ணிய தலங்களுக்கு சுற்றுலா செல்வதும் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரும் புண்ணிய தலங்களுக்கு செல்வதையும் புனித யாத்திரையாக கருதுகின்றனர். இந்நிலையில் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை திருமூர்த்தி அணை பஞ்சலிங்க அருவி அமணலிங்கேஸ்வரர் கோயில் போன்ற சுற்றுலா தலங்களுக்கு கடந்த 2 வாரங்களாக ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யும் முன்பாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க செல்கின்றனர். ஒரு சிலர் கோயிலின் முன் ஓடும் பாலாற்றிலேயே குளித்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுள்கள் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் அருகே பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் பஞ்சலிங்க அருவியில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அருவியின் அருகிலேயே குளியலறை கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தற்காலிக கழிப்பிடங்களும் குடிதண்ணீர் வசதியும் செய்து தர வேண்டும் எனவும் பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருவதால் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், உடைமாற்றும் அறை, குடிநீர் வசதி உணவருந்தும் கூடம் உள்ளிட்டவற்றை சுற்றுலாத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: