கடமலைக்குண்டு அருகே இலந்தைகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

வருசநாடு: கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது.

அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.

கடமலைக்குண்டு ஊராட்சியில் கரட்டுப்பட்டி அருகே 1 ஏக்கர் பரப்பளவில் இலந்தை குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை தனி நபர்கள் சிலர் முழுமையாக ஆக்கிரமித்து அதில் விவசாயம் செய்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்தினர் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இலந்தை குளத்தை அளவீடு செய்தனர். இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலந்தை குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் முதற்கட்டமாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் குளத்தை சுற்றிலும் கரைகள் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்றது குளத்தில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த பணிகளின் போது கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திராதங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளியப்பன், ஊராட்சி செயலர் துரைப்பாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: