இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்தில் நீர்பாசனத்தை மேம்படுத்தும் பணிகள் ‘படுஜோரு’: கண்மாய்கள், ஓடைகள், ஆறுகளில் சீரமைப்பு பணி தீவிரம்

தேனி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற திமுக அரசு சார்பில், தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் திமுக ஆட்சியின் நீர்பாசன பராமரிப்பு காரணமாக 75 சதவீத கண்மாய்கள் தேனி உபகோட்டத்தில் நிரம்பி உள்ளதால் விவசாயிகள், ெபாதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. கொடைக்கானல் மலை, போடி மெட்டு, கம்பம் மெட்டு, மேகமலை, வருசநாடு மலையடிவாரங்களில் மாவட்டம் உள்ளதால் இயற்கை எழில் சூழ்ந்ததாகவும், ஆறுகள், ஓடைகள் , கண்மாய்கள் நிரம்பிய மாவட்டமாகவும், வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி ஆகிய நீர்தேக்க அணைகளையும் உள்ளடக்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டமாக இருந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகாக்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் மஞ்சளாறு வடிநில கோட்டத்தில் 91 கண்மாய்களும், பெரியாறுவைகை வடிநில கோட்டம் மற்றும் வருவாய்த் துறை, ஊராட்சி கண்மாய்கள் என மாவட்ட அளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கண்மாய்கள் முறைசாரா கண்மாய்களாக மழையை நம்பியுள்ள மானாவாரி கண்மாய்களாகவும், பிற கண்மாய்கள் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரைக்கொண்டு நிரம்பக் கூடிய முறைப்படுத்தப்பட்ட கண்மாய்களாக உள்ளன.

இதில் போடி, உத்தமபாளையம், தேனி உள்ளிட்ட தாலுகாக்களில் 18ம் கால்வாய் மூலம் திறக்கப்படும் நீரினை ஆதாரமாக கொண்ட கண்மாய்களும் உள்ளன. கண்மாய்கள் பராமரிப்பில் கடந்த அதிமுக ஆட்சியானது போதிய கவனம் செலுத்தாமல் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியை கரப்சன், கலெக்சன், கமிசன் அடிப்படையில் முறைப்படி செலவிடவில்லை என கடந்த கால அதிமுக ஆட்சியின் போது திமுக பிரசாரம் செய்து வந்தது. இதன்படி, தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது, குடிமராமத்து என நடந்த கண்மாய் பணிகளில பெரும் முறைகேடுகள் நடந்து முறைப்படியாக நிதி முழுமையாக செலவிடப்படாமல் அரைகுறையாக பணிகள் நடந்தேறின.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும், கடந்த நீர்பாசனத்தின் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது. நீர்பாசனத்திற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அணைகள், கண்மாய்கள், ஓடைகள், ஆறுகள் சீரமைப்பு பணியில் முக்கியத்துவம் அளித்து வருகின்றார். இதன்படி, தமிழகத்தில் நீர்பாசனத்தை மேம்படுத்த அணைகள், கண்மாய்களில் பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கண்மாய் தூர்வாறுதல், வரத்து வாய்க்கால் களை தூர்வாறுதல், கரைப்பலப்படுத்துதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் தேனியை உபவடிநில கோட்டத் தலைமையாக கொண்டு தேனி, போடி, ஆண்டிபட்டி தாலுகாக்களில் 61 கண்மாய்கள் உள்ளன. இதில் தேனி தாலுகாவில் உள்ள சிகுஓடைக்கண்மாயில் நடப்பு நிதியாண்டில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வரத்து வாய்க்கால் தூர்வாறி கரையை பலப்படுத்தியதன் காரணமாக தற்போது சிகுஓடைக்கண்மாய் முழுக் கொள்ளளவை அடைந்து நீர் மறுகால் பாய்ந்து வருகிறது. இதேபோல, ஆண்டிபட்டி தாலுகாவில் கொத்தப்பட்டி அருகே நாகலாபுரம் ஓடையில் ரூ.2.1 கோடி செலவில் சுமார் 30 மீட்டர் அகலத்திற்கு பிரமாண்ட தடுப்பணை கட்ட திட்டமிடப்பட்டு இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல போடி தாலுகாவில் மஞ்சிநாயக்கன்பட்டி அருகே கொட்டக்குடி ஆற்றில் ரூ.3.75 கோடியில் தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒப்பந்தபுள்ளிகள் கோரும் பணி விரைவில் நடத்தப்பட்டு தடுப்பணைகள் கட்டும் பணி துவங்கப்பட உள்ளது.

தேனி உபகோட்டத்தில் புதிய தடுப்பணைகள் கட்டும் பணி துவக்கம், கடந்த கால அதிமுக ஆட்சியின்போது, நடந்த முறைகேடுகளை சீரமைத்து, வரத்துக்கால்வாய்களை பலப்படுத்தியதன் காரணமாக தற்போது தேனி உபகோட்டத்தில் போடி தாலுகாவில் ராஜபூபாள சமுத்திரம் கண்மாய், மேலச்சொக்கநாதபுரம் சங்கரப்பநாயக்கன்குளம், மீனாட்சிபுரம் தாசன்செட்டிகுளம், போடி பங்காருசாமிநாயக்கர் குளம் மரிமூர் கண்மாய், முத்துகொம்பன் கண்மாய், புதுக்குளம், அம்மாகுளம், கழிவு ஓடைக்குளம், சின்னஒட்டுக்குளம், வீரபாண்டி கன்னிமார்குளம், கோடாங்கிபட்டி கணக்கன்குளம், டொம்புச்சேரி கண்மாய், கோடாங்கிப்பட்டி பெரியகுளம், கோடாங்கிபட்டி கருவன்குளம், கோடாங்கிபட்டி சிறுகுளம், சோதரநாயக்கன்குளம், மீனாட்சிபுரம் செட்டிகுளம், மீனாட்சிபுரம் மீனாட்ச கண்மாய்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

ஆண்டிபட்டி தாலுகாவில் குன்னூர் கருங்குளம் மற்றும் செங்குளம், மயிலாடும்பாறை கடம்பன் குளம், கோவிலான்குளம், கங்கன்குளம், அம்மாகுளம் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. தேனி தாலுகாவில் தேனி மீறுசமுத்திரம் கண்மாய், அல்லிநகரம் தாமரைக்குளம் அல்லிநகரம் மந்தையம்மன்குளம், தேவாரம் அழகிரிசெட்டிகுளம் உள்பட 45 கண்மாய்கள் நிரம்பி உள்ளன. இதன்காரணமாக தேனி உபவடிநிலகோட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரூ.5.85 கோடியில் புதிய தடுப்பணைகள்

மஞ்சளாறு வடிநில கோட்ட தேனி உபகோட்ட உதவி பொறியாளர் பாசித் கூறியதாவது, ‘‘தேனி உபகோட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு வரவேண்டிய நீர் முறையான பராமரிப்பின் காரணமாக வரத்து வாய்க்கால்களில் இருந்து போதிய அளவு கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது 75 சதவீத கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தமிழக அரசு கண்மாய் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதன் காரணமாக தேனி உபகோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய கண்மாய்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த நிதியாண்டில் உடனடியாக பணிகள் மேற்கொள்ள வேண்டிய கண்மாய்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாண்டு சிகு ஓடையில் ரூ.40 லட்சம் ஒதுக்கி வரத்து கால்வாய் தூர்வாறி பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதால் சிகுஓடை முழுமையாக நிரம்பி உள்ளது. இதேபோல, விரைவில் ரூ.5 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டும் பணியும் நாகலாறு ஓடையிலும், கொட்டக்குடி பகுதியிலும் நடக்க உள்ளதால் நீர்பாசன வசதி பெருகி வளம் சேர்க்க உள்ளது.’’ என்றார்.

Related Stories: