போலி பாஸ்போர்ட் மூலம் டாக்கா செல்ல முயன்ற வங்கதேச பெண் கைது

சென்னை: போலி பாஸ்போர்ட்டில் டாக்கா செல்ல முயன்ற வங்கதேச பெண் பிடிபட்டார். சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும் ஹிஷி பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட தயாரானது. இதற்காக, விமான பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இந்திய பாஸ்போர்ட்டுடன் ரீனா பேகம் (37) என்பவர் சுற்றுலா பயணிகள் விசாவில் டாக்கா செல்ல வந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது போலி என தெரியவந்தது. அவரது பயணத்தை ரத்து செய்து தீவிரமாக விசாரித்தனர். இதில், அவர் வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் ஏஜென்ட்கள் மூலம், பணம் கொடுத்து போலி பாஸ்போர்ட் வாங்கியது தெரியவந்தது.

அவர் எதற்காக போலி பாஸ்போர்ட் வாங்கினார், அந்த பாஸ்போர்ட்டை வைத்து எங்கெல்லாம் சென்றார், சென்னைக்கு எதற்கு வந்தார், எங்கு தங்கி இருந்தார் என்று தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், அவர் சரிவர பதிலளிக்கவில்லை. இதையடுத்து க்யூ பிரிவு போலீசார், மத்திய உளவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நேற்று அதிகாலை விரைந்து வந்து, ரீனா பேகத்தை கைது செய்து, சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: