ரூ.648 கோடியில் பயோ மைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கை மீட்க திட்டம்; சென்னை மாநகராட்சியில் தீர்மானம்

சென்னை: கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை ரூ.648 கோடி செலவில்  பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கும் திட்டம் மற்றும் மெரினா கடற்கரையில் இலவச வைபை வசதி அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மொத்தம் 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இரண்டு தீர்மானங்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானவை வருமாறு:

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அண்ணா சதுக்கம் அருகில் புதிய நவீன அமைப்புடன் கூடிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இலவச வைபை வசதி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

 அன்படி, கலங்கரை விளக்கம் அருகில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச வைபை வசதி அளிக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று, வார்டு 67க்குட்பட்ட ஜெய் பீம் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தை, திரு.வி.க.நகர் காவல் நிலைய பயன்பாட்டிற்காக வாடகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

 சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 5000 டன் குப்பைக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதில் பிரதானமாக, குப்பை கழிவுகள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கும் கொண்டு செல்லப்படுகிறது.

நீண்ட காலமாக கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளால் நிலத்தடியில் ரசாயன தன்மை அதிகரித்தும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் கையாளவும், கிடங்கை மறுசீரமைத்து நிலத்தை மீட்டெடுக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலை மற்றும் ஐஐடி வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனைகளின்படி திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கு பயோ மைனிங் திட்டத்திற்கு ரூ.648 கோடி செலவில் மொத்தம் 6 தொகுப்புகளாக  செயல்படுத்தப்பட உள்ளது. ஒன்றிய அரசு நிதியாக 25 சதவீதம் ரூ.160 கோடி ரூபாயிலும், மாநில அரசு 16 சதவீதம் ரூ.102 கோடி செலவிலும் சென்னை மாநகராட்சி சார்பில் 59 சதவீதம் ரூ.378 கோடி என மொத்தமாக ரூ.648.83 கோடியில் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 251.9 ஏக்கர் பரப்பளவில் உள்ள 64 ஆயிரம் டன் எடையுள்ள குப்பை பயோ மைனிங் செய்வதற்கு தமிழக அரசிடம் ஒப்புதல் பெறும் தீர்மானத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறைகளில்  இடப்பற்றாக்குறை உள்ளதால் புதிய கல்லறைகளுக்கு அனுமதி நிறுத்துவது, புதிய  உடல்களை புதைப்பதற்கும் அனுமதியை நிறுத்துவது மற்றும் கிறிஸ்தவர்களுக்கான  அடக்கஸ்தலங்கள் அமைக்க நிபந்தனைகளை தளர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.  

Related Stories: