தாம்பரம் நீதிமன்றத்தில் 12 ஆண்டு நடந்த வழக்கில் தீர்ப்பு சாட்டிலைட் போன், போலி ஆவணம் வைத்திருந்தவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை: இலங்கையை சேர்ந்தவர் செல்வராசா. இவரது மகன் கிருஷ்ணலிங்கம் (39). இவருக்கு வேந்தன், ரமேஷ், சரவணன் என்ற பெயர்களும் உண்டு. கடந்த 1998ல் இலங்கையில் இருந்து அகதியாக தமிழக மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்துள்ளார். பிறகு முகாமில் இருந்து தப்பினார். மண்டபம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணலிங்கம், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு, கள்ளத் தோணியில்   ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு படகுகள் மூலம் டீசல் மற்றும் பல்வேறு பொருட்களையும் கடத்தி வந்ததாகவும் க்யூ பிராஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணலிங்கத்தை தேடி வந்தனர். இதற்கிடையே, கிருஷ்ணலிங்கம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்து பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது குறித்த தகவல் கிடைத்து, க்யூ பிராஞ்ச் போலீசார் கடந்த 2010ல் கிருஷ்ணலிங்கத்தை கைது செய்தனர்.

 

அப்போது, அவர் தங்கி இருந்த அறையில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் இருந்தது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கு அவர் பேசியதும் தெரிய வந்தது. 9 செல்போன்கள், லேப்டாப், போலி டிரைவிங் லைசன்ஸ் உள்பட பல்வேறு பொருட்களை கைப்பற்றினர். இந்த வழக்கு, தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், கிருஷ்ணலிங்கம் மீதான வழக்குகளை விசாரித்த தாம்பரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஹானா நேற்று முன்தினம் மாலை தீர்ப்பு வழங்கினார். அவர் கூறியதாவது: கிருஷ்ணலிங்கம், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை பல ஆண்டுகளாக பயன்படுத்தி, சட்ட விரோத செயலில் ஈடுபட்டதற்காக இந்தியன் வயர்லெஸ் டெலிகிராபிக் ஆக்ட் சட்டத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை, 420 மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை, போலி ஆவணங்கள் தயார் செய்ததற்காக 471 பிரிவில் 2 ஆண்டு சிறை, ஏமாற்றுதல் 468 பிரிவுக்கு 2 ஆண்டு சிறை, போலி அரசு முத்திரைகளை தயாரித்து பயன்படுத்தியதற்கு 473 பிரிவில் 2 ஆண்டு சிறை என மொத்தம் 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 4,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி சஹானா உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் எந்த பிரிவு வழக்கில் அதிக கால தண்டனையாக இருக்கிறதோ அந்த தண்டனையை மட்டும் கிருஷ்ணலிங்கம் அனுபவிக்க முடியும். அதன்படி, மூன்று ஆண்டு மட்டுமே கிருஷ்ணலிங்கம் தண்டனையை அனுபவிக்க முடியும். ஆனால், ஏற்கனவே அவர் மூன்றாண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டதால், மும்பையில் அவர் மீது உள்ள வங்கி கொள்ளை உள்பட இரண்டு வழக்கு தொடர்பாக அவரை தமிழக போலீசார் மும்பை தலோஜா சிறையில் ஒப்படைக்க உள்ளனர். கிருஷ்ணலிங்கம் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் காயத்ரி ஆஜராகி அரசு தரப்பில் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: