பேசின்பிரிட்ஜ் கூவம் கால்வாயில் ரயில்வே பாலம் கட்ட வைத்திருந்த இரும்பு கம்பி திருடிய 6 பேர் கைது

தண்டையார்பேட்டை: பேசின்பிரிட்ஜ் கூவம் கால்வாயில் ரயில்வே இணைப்பு பால கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு கம்பிகளை திருடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடி- பேசின் பிரிட்ஜை இணைக்கும் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை இணைத்து புதிதாக பாலம் கட்டும் பணி ரயில்வே சார்பில் சுமார் ரூ.3 கோடியில் நடந்து வருகிறது. இந்த பணியை வெங்கடேசன் என்பவர் கான்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், பாலம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள்  அடிக்கடி திருடுபோய் வருவதாகவும், இதை கண்டுபிடித்து தரும்படியும் சூபர்வைசர் தமிழரசன் (29) பேசின்பிரிட்ஜ் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு உதவி ஆணையர் அழகேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் உதவி ஆய்வாளர் முரளி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். பேசின் பிரிட்ஜ் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து செல்லும்போது சந்தேகத்தின்பேரில் நின்று இருந்த வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். மேலும், தீவிர விசாரணையில் ரயில்வே பால கட்டுமான பணிக்கு வைத்த இரும்பு கம்பியை திருடியவர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணையில், புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த மனோ என்கின்ற மனோஜ் (23), பிரபல ரவுடி. இவன் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும் கன்னிகாபுரத்தை சேர்ந்த செல்வம், அப்பு என்கின்ற மணிகண்டன், சந்தோஷ், அர்ஜுனன், விக்கி ஆகியோர் கூட்டு சேர்ந்து சிறுக சிறுக ஒரு டன்னுக்கு மேலாக இரும்பு கம்பிகளை திருடி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இவர்களிடமிருந்து 500 கிலோ இரும்பு கம்பி பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு 6 பேர் மீதும் பேசின் பிரிட்ஜ் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பேசின் பிரிட்ஜ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: