மெரினாவில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்து கணவருக்கு அனுப்புவதாக பெண்ணுக்கு மிரட்டல்; ரூ.2 லட்சம் பறித்தவர் கைது

சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணி (35), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த வாரம் மெரினா காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2.12.2019ல் என்னுடன் பணியாற்றும் ஆண் நண்பருடன் மெரினா கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அங்கு வந்த ஒருவர், தான் போலீஸ் என்று கூறி எங்களை செல்போனில் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படத்தை உனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினார். புகைப்படத்தை அனுப்ப கூடாது என்றால், எனக்கு நீங்கள் பணம் தர வேண்டும் என்று கேட்டார். போலீஸ் என கூறி அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு வந்தார். நானும் கணவருக்கு தெரியாமல் சிறுக சிறுக பணம் கொடுத்தேன். இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரம் கொடுத்துள்ேளன். மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். எனவே மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றுவதாக கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ராணி கொடுத்த புகாரின்படி, மெரினா போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராணி கூறியபடி, சதீஷ்குமார் என்பவர் யாரும் மெரினா காவல் நிலையத்தில் வேலை செய்யவில்லை.

யார் இந்த மோசடியில் ஈடுபட்டனர் என ராணி புகாரில் அளித்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, சென்னை மணலி எம்எம்டிஏ மாத்தூர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (40) என தெரியவந்தது. இவர், மெரினா கடற்கரையில் திருமணமான பெண்கள் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஜோடிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் புகைப்படம் எடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் புகைப்படத்தை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதுபோல் சதீஷ் குமார் பல கள்ளக்காதல் ஜோடிகள் மற்றும் சில காதலர்களிடமும் பணம் பறித்துள்ளார். மேலும், இவரது செல்போனை பறிமுதல் செய்து பார்த்த போது, அதில் பல காதல் ஜோடிகள் புகைப்படங்கள் இருந்தன. இதுபோன்ற மோசடியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து, போலீசார் சதீஷ்குமார் மீது மிரட்டி பணம் பறித்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: