புதுடெல்லி: தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் உலமாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். இந்தோனேசியாவின் அரசியல், சட்டம், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் முகமது மஹ்புத் தலைமையில் உலமாக்கள், பிற மதங்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று டெல்லி வந்துள்ளனர். இங்குள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் பல்வேறு தலைப்புகளில் உலமாக்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் அவர்கள் பங்கேற்றனர். இதில் ‘இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும் மதங்களுக்கிடையேயான அமைதி, சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் உலமாக்களின் பங்கு’ என்ற தலைப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தீவிரவாதம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது. ஏனெனில் இஸ்லாம் என்றால் அமைதி மற்றும் நல்வாழ்வு ஆகும். இந்தியாவும், இந்தோனேசியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.