உருட்டிய போர்ச்சுகல் ‘நாக் அவுட்’ சுற்று உறுதி

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் எச் பிரிவு லீக் ஆட்டத்தில், உருகுவேயை 2-0 என்ற கோல் கணக்கில் உருட்டித் தள்ளிய போர்ச்சுகல்  அணி ‘நாக் அவுட்’ சுற்றையும் உறுதி செய்தது. லுசெய்ல் அரங்கில் நேற்று நடந்த 32வது லீக் ஆட்டத்தில் எச் பிரிவில் உள்ள  போர்ச்சுகல் (9வது ரேங்க்) - உருகுவே (14வது ரேங்க்) அணிகள் மோதின. இரண்டு முறை உலக கோப்பையை வென்ற உருகுவே முதல் ஆட்டத்தில் கொரியா உடன் 0-0 என டிரா செய்திருந்தது. சாம்பியன் கனவில் இருக்கும் போர்ச்சுதல் முதல் ஆட்டத்தில்  கானாவை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வீழத்தி இருந்தது. அதனால் 2வது ஆட்டத்தில் வெற்றி அவசியம் என்ற நெருக்கடியுடன் 2 அணிகளும் களம் கண்டன. முதல் பாதியில் கோலடிக்க போர்ச்சுகல் மல்லுக்கட்ட, அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் உருகுவேயும் ஈடுகொடுத்து விளையாட ஆட்டத்தில் அனல் பறந்தது. இடைவேளையின்போது இரு அணிகளும் 0-0 என்ற கணக்கில் சமநிலை வகித்தன. 2வது பாதியின் தொடக்கத்தில் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல் ‘ஆஃப் சைடு’ என நிராகரிக்கப்பட்டது.

அதனால் போர்ச்சுகல் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை, புரூனோ பெர்னாண்டஸ் 54வது நிமிடத்தில் அபாரமாக கோல் போட்டு தீர்த்து வைத்தார். மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணிகளும் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. குறிப்பாக, போர்ச்சுகல் கோல் கீப்பர் மிகச் சிறப்பாக செயல்பட்டு உருகுவே வீரர்களின் பல முயற்சிகளை முறியடித்தார்.

காயம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தை ஈடுகட்டும் வகையில் கூடுதலாக 11 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டது. 93வது நிமிடத்தில் நடுவர் மறுஆய்வுக்கு பிறகு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய புரூனோ மீண்டும் கோலடித்து அசத்த, போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் எச் பிரிவில் இருந்து முதல் அணியாக போர்ச்சுகல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்தது.

Related Stories: