இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலம்: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வியில் முன்னிலையில் உள்ள மாநிலமாக இருக்கிறது. இருப்பினும் இரு மொழிக் கொள்கையிலேயே பயணிக்கிறது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:  திருச்சியில் வானவில் மன்றம் என்ற திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகம் கல்வியில் முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டுக்கென மாநில கல்வித்திட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியை பொறுத்தவரையில் எதுவாக இருந்தாலும் முன்னிலையில் செயல்பட்டுக் கொண்டு இருப்பது தமிழ்நாடுதான். இந்தியாவுக்கே கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. படிக்கும்போதே பல்வேறு தொழில் முனைவோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வியியல் படித்தால் தான் ஆசிரியராக முடியும் என்பது இல்லை.

இப்போதெல்லாம் ஆசிரியர் தொழில் நல்ல தொழிலாக உள்ளது. வரும்காலங்களில் கல்வியியல் படிப்புகளிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். வெறும் மனப்பாடம் செய்துவிட்டு தேர்வு எழுதும் முறையை மட்டும் நம்பக் கூடாது. பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக பாடத்திட்டங்கள் அமைய வேண்டும். தொழில் சார்ந்த கல்வியை உருவாக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கல்வி நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் அண்ணா சொன்ன இருமொழிக் கொள்கையிலேயே தமிழ்நாடு பயணிக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மொழி அறிவையும் சமூக அறிவையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: