மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விபரீத முடிவு மனஅழுத்த மாத்திரைகளை பாலில் கலந்து 2 பெண் குழந்தைகளை கொல்ல முயற்சி: தந்தையும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சென்னை: குடும்பம் நடத்த மனைவி வராததால் மனமுடைந்த கணவர், தனது 2 பெண் குழந்தைகளுக்கு மனநோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து கொல்ல முயன்றுள்ளார். அவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவல்லிக்கேணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் லால்முகமது கிராஸ் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (39). தனியார் நிறுவன ஊழியர். வீடு புரோக்கராகவும் உள்ளார். இவரது மனைவி கவிதா (34), குழந்தைகள் தியா (6), கெனிஷா (4). விஜயகுமாருக்கு குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு போதையில் வந்து மனைவி கவிதாவிடம் தகராறு செய்வாராம். இதனால் மனமுடைந்த கவிதா பொழிச்சலூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு 2 குழந்தைகளுடன் சென்று விட்டார். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியும் கவிதா. கணவர் விஜயகுமாருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். வார இறுதி நாட்களில் குழந்தைகள் விஜயகுமாருடன் இருக்க கவிதா சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக விஜயகுமார் வார இறுதி நாட்களில் மகள்களை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டு, திங்கட்கிழமை மனைவி கவிதாவிடம் விட்டுவிட்டு வருவது வழக்கம்.

கடந்த வெள்ளிகிழமை இரண்டு பெண் குழந்தைகளையும் விஜயகுமார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை குழந்தைகளை கவிதா வீட்டில் விடாமல் இருந்துள்ளார். குழந்தைகளுக்கு மனநோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகளை அதிகளவில் பாலில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். தானும் அதே பாலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெகுநேரம் அறையில் இருந்து குழந்தைகள் மற்றும் மகன் விஜயகுமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை ராமச்சந்திரன் அறைக்கு சென்று பார்த்த போது, குழந்தைகள், மகன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனால் அவர், உடனே 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். சரியான நேரத்தில் 3 பேருக்கும் சிகிச்சை அளித்ததால் உயிர் பிழைத்தனர். தொடர்ந்து, டாக்டர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் உள்ளனர். மருத்துவமனை புகாரின்படி, திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த கணவர் 2 பெண் குழந்தைகளை கொலை செய்ய முயன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: