ஒவ்வொரு ஆண்டும் 15 இடங்களை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை: அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

ராணிப்பேட்டை: ஏலகிரி, ஜவ்வாதுமலை, கொல்லிமலையில் சுற்றுச்சூழல் முகாமுடன் சாகச விளையாட்டு வசதி ஏற்படுத்தப்படும் என ராணிப்பேட்டையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறுகையில், தமிழகத்தில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 1000 இடங்களில் முதற்கட்டமாக 300 இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்றலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஏலகிரி, ஜவ்வாதுமலை, கொல்லிமலை உள்ளிட்ட இடங்களில் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து சுற்றுலாத்துறைக்கு 5 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, அங்கு இரண்டரை ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் முகாம் அமைக்கப்படும். மீதி இரண்டரை ஏக்கரில் சாகச விளையாட்டுகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழகம் முழுவதும், மாவட்ட வாரியாக சுற்றுலாத்தலங்கள் ஏற்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர், என்றார்.

Related Stories: