கோவை ஜமேஷா முபின் போலவே பேஸ்புக்கில் மரண செய்தி பதிவிட்ட திருச்சி வாலிபர்கள் 2 பேர் கைது

திருச்சி: பேஸ்புக் பக்கத்தில் மரண செய்தி பதிவு வைத்திருந்த திருச்சியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி அதிகாலை கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் இறந்தார். முன்னதாக அவர் தன் இறப்பு குறித்து ஒரு பதிவை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். இதைதொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் சவுபர் அலி(28), தனது பேஸ்புக் பக்கத்தில் கோவை ஜமேஷா முபின் போன்றே மரண செய்தி பதிவை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்த தகவல் திருச்சி மாவட்ட போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சவுபர் அலியின் முகநூல் பக்கம் மற்றும் அவரது நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர். இதில் அவரது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றிருந்ததால் சவுபர் அலியை ராம்ஜிநகர் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து, செல்போனை கைப்பற்றி அவருடன் தொடர்பில் யார் யார் இருக்கிறார்கள், யாருடன் பேசியுள்ளார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருச்சி பாலக்கரை கான்மியான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாதுஷா சர்வேஷ்(24) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கோவை ஜமேஷா முபின் போன்றே மரண செய்தி பதிவை வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பாலக்கரை போலீசார் சாதுஷா சர்வேஷை கைது செய்தனர்.

Related Stories: