கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவி கழுத்தறுத்து கொலை: கணவர், கள்ளக்காதலி கைது

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவர், அவரது கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (35). பந்தல் போடும் தொழிலாளி. மனைவி தேவி (33). 3 மகன்கள் உள்ளனர். ராஜசேகருக்கும், மேல்மாத்தினிபட்டியை சேர்ந்த சரோஜா (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த தேவி, கணவர் ராஜசேகரை கண்டித்துள்ளார். பின்னர் கணவருடன் சண்டையிட்டு குஜிலியம்பாறை தாலுகா அரண்மனையூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையே ராஜசேகரிடம் பேசிய சரோஜா, ‘‘உன் மனைவி உயிரோடு இருக்கும் வரை நமக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும். அதனால் உன் மனைவியை கொன்று விடு’’ என்று கூறியுள்ளார். அதன்படி ராஜசேகர், தனது மாமியார் ஊருக்கு சென்று அங்கு தங்கியுள்ளார். கடந்த 27ம் தேதி ராஜசேகரின் மாமியார் அருகில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ராஜசேகர், வீட்டில் தனியாக இருந்த மனைவி தேவியின் கழுத்தை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்து கொலை செய்தார்.

அங்கிருந்த 3 மகன்களையும் அழைத்து கொண்டு பூத்தாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு, மேல்மாத்தினிபட்டியில் இருந்த சரோஜாவுடன் திருச்சிக்கு ராஜசேகர் சென்றார். அங்கு இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

சம்பவம் தொடர்பாக எரியோடு போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் திருச்சியில் பதுங்கியிருந்த இருவரையும், வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி தலைமையில் தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.

Related Stories: