சிபிசிஐடி எஸ்பி தலைமையில் கொடநாடு வழக்கு விசாரிக்க 49 பேர் அடங்கிய தனிப்படை

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க எஸ்பி மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படையை சிபிசிஐடி அமைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23ம் தேதி நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தற்போது சிபிசிஐடி எஸ்பி மாதவன் தலைமையில் கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சந்திரசேகர் உள்பட 49 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வரும் காலங்களில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்தே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். கோவைக்கு வர முடியாத சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் இருந்தால் மட்டும் நீலகிரியில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கென தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

Related Stories: