அதானி துறைமுக பிரச்னை அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி: போராட்டம் தொடரும் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: விழிஞ்ஞத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில்  முடிந்தது. அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் என்று மீனவர் அமைப்பினர் தெரிவித்தனர். திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அமைக்கப்பட்டு வரும் அதானி துறைமுகத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் விழிஞ்ஞம் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர் உட்பட 36 போலீசார் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக போலீசார் 3000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில்  சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், பாஜக உள்பட கட்சியினரும், மீனவர்கள் சங்கப்  பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தவிர அனைத்து கட்சியினரும் வன்முறை சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் துறைமுகப்  பணிகளுக்கும் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் வன்முறை சம்பவங்களுக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகளும், கத்தோலிக்க சபையினரும் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டம்  தொடரும் என்று கூட்டத்தில் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் துறைமுகப் பணிகளை நிறுத்தி வைக்க முடியாது என்று  கேரள அரசும் அறிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் இங்கு போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, விழிஞ்ஞம் துறைமுகப் பகுதிகளில்  திருவனந்தபுரம் சரக டிஐஜி நிஷாந்தினி தலைமையில் 650 சிறப்பு பாதுகாப்பு  படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: