ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் திமுக கூடுதல் மனு

புதுடெல்லி: பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என திமுக தரப்பில் எழுத்துப்பூர்வ கூடுதல் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘குஜராத், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று கடந்த மாதம் 28ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக  திமுக, முஸ்லிம் லீக்,விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில்,இலங்கையில் இலங்கைத் தமிழர்கள், இந்திய தமிழர்கள் என இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். பல்வேறு காரணங்களால் இந்தியா திரும்பி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலங்கைத் தமிழர்கள் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சரத்துகள் இல்லாத ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் ஒருதலைபட்சமானது மற்றும் சட்ட விரோதமானது ஆகும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை என்பது ஒரு தலைப்பட்சமானது மட்டுமில்லாமல் தன்னிச்சையானது ஆகும். மேலும் மதரீதியில் குடியுரிமை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பின்மைக்கு எதிரானது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக குடி பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கேட்டால் காது கேட்காதது போலவும், மாற்றான் தாய் மனப்பான்மையுடனும் ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது. அதனால் இப்படிப்பட்ட பாகுபாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: