×

ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

நியூயார்க்: உலக கால்பந்து நடக்கும் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளதால், சுகாதார தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்:
 ‘கத்தாரில் 12 லட்சத்திற்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் குவிந்துள்ளனர். கத்தாரில் ஒட்டகக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த தொற்று பரவினால், மூன்றில் ஒரு பங்கு மக்களை பாதிக்கும். மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிஸ்டம் அல்லது மெர்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த ஒட்டக காய்ச்சல் குறித்து, ‘நியூ மைக்ரோப்ஸ் அண்ட் நியூ இன்ஃபெக்ஷன்ஸ்’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா, குரங்கு காய்ச்சல் உள்ளிட்ட எட்டு விதமான தொற்று அபாயங்களில் ஒன்றாக ஒட்டக காய்ச்சலும் உள்ளது. இந்த காய்ச்சல் சுவாசக் கோளாறு மூலம் பரவ வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

பொதுவாக ஒட்டகக் காய்ச்சல் தொற்று பரவல் நோயானது, சவூதி அரேபியா, ஜோர்டான், ஏமன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் அவ்வப்போது பரவும் வைரஸ் தொற்று ஆகும். தற்போது அதிகளவில் மக்கள் கத்தாரில் கூடியுள்ளதால், ஒட்டக காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : World Health Organization , Camel flu, risk, World Health Organization warning
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...