அரியானா ஆரவல்லி வனப்பகுதியில் சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட வாலிபர் சடலம்: இளம்பெண் என்று நினைத்த நிலையில் திருப்பம்

பரிதாபாத்: அரியானாவில் சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது. பெண்ணின் உடல் என நினைத்த நிலையில், திடீர் திருப்பமாக அது ஆணின் சடலம் என்பது தெரியவந்தது. அரியானா மாநிலம் சூரஜ்குண்ட்-பாலி சாலையின் ஆரவல்லி வனப்பகுதியில் கடந்த 24ம் தேதி மர்மமான சூட்கேஸை போலீசார் கைப்பற்றினர். அந்த சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சடலம் இருந்தது. சூட்கேசிற்குள் பெண்ணின் ஆடைகள் இருந்தன. அதனால் இளம் பெண்ணின் சடலமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த சடலத்தின் உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட தடயங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி பார்த்தால், கடந்த ஜூன் மாதம் கொலை செய்து சூட்கேசில் வீசப்பட்டிருக்கலாம் என்றும், அது 30 வயதுடைய ஆணின் சடலம் என்றும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட இடத்தில் வாலிபரை கொன்று, அவரது சடலத்தை துண்டுகளாக வெட்டி எடுத்துள்ளனர். பின்னர் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக தலையை தனியாக எடுத்துக் கொண்டு, உடல் பாகங்களை சூட்கேசில் அடைத்து வனப்பகுதியில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

சூரஜ்குந்த்-பாலி சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளி மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடக்கிறது. மூன்று மாதங்களாக வனப்பகுதியில் சூட்கேஷ் கிடந்ததால், தடயங்களை ேசகரிப்பதில் சிக்கல் உள்ளது. குற்றவாளிகளின் கைரேகைகளும் மழையால் அடித்துச் செல்லப்பட்டது. சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் ஆடைகள், சூட்கேஸ் போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறோம். டெல்லி, அரியானா போலீஸ் கூட்டு தனிப்படை இவ்வழக்கை விசாரித்து வருகிறது’ என்று கூறினார்.

Related Stories: