ராகிங்கை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை: வேலூர் சி.எம்.சி. கல்லூரி சார்பில் அறிக்கை

சென்னை: ராகிங்கில் ஈடுபட்ட மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வேலூர் சி.எம்.சி. விளக்கம் அளித்துள்ளது. ராகிங் தொடர்பாக ஏற்கனவே 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 மாணவர்கள் கண்டறியப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ராகிங்கை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சி.எம்.சி. கல்லூரி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சி.எம்.சி. கல்லூரிமருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி இறுதியாண்டு மாணவர்கள் ராகிங் செய்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  சி.எம்.சி. மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கனது இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில்;

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் புதிய விசாரணை விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், கல்லூரி விடுதி மற்றும் நூலகங்களில் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுளளதாகவும், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகிங் சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற பிறப்பாணை பிறப்பிக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளதாகவும், முதலாமாண்டு மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: