குற்ற செயல்களில் ஈடுபட்டால் யார் பொறுப்பு? பிற நபர்களுக்கு சிம்கார்டு வாங்க அடையாள அட்டை கொடுக்காதீர்கள்: காவல்துறை வேண்டுகோள்

நாகர்கோவில்: செல்போன்களை மையமாக வைத்து அதிகளவில் குற்ற செயல்கள் அரங்கேறி வருகின்றன. மிரட்டல்கள், மோசடிகள், ஆபாச பேச்சுகள், தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு என பல்வேறு சமூக விரோத செயல்கள், தீவிரவாத செயல்களுக்கு செல்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. செல்போன்களின் உரையாடல்கள் மூலம் பல்வேறு தகவல்களையும் காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் செல்போன் நம்பரை ஆய்வு செய்யும் போது அந்த நம்பர், வேறு நபர்களின் அடையாள அட்டை மூலம் வாங்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இதனால் சம்பந்தம் இல்லாதவர்களிடம் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், பிற நபர்களுக்கு செல்போன் சிம்கார்டு வாங்க தங்களின் ஆதார் உள்ளிட்ட பிற அடையாள அட்டைகளை கொடுக்க வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக குமரி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் யாராவது செல்போன் சிம்கார்டு வாங்க வேண்டும் என்பதற்காக தங்களின் ஆதார் மற்றும் பிற அடையாள அட்டைகளை கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு கொடுக்கும்போது சம்பந்தப்பட்ட நபர், குற்ற செயல்களில் ஈடுபட்டால், அவரின் செல்போன் சிம்கார்டு யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்பதை விசாரித்து, அது தொடர்பாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். சில சமயங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் சாதாரணமாக மக்களிடம் பழகி, அவர்கள் மூலம் சிம்கார்டு வாங்குகிறார்கள். எனவே பொதுமக்கள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையின் சமூக வலை தள பக்கத்திலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: