கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

கோவை: கோவையில் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை கெம்பட்டி காலனி எல்.ஜி. தோட்டத்தை சேர்ந்தவர் சிவா (33). தொழிலாளி. இவரின் சகோதரருக்கு வேலை வாங்கி தருவதாக அவரது நண்பர் வினோத் (32) என்பவர் ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால், அவர் கூறியபடி வேலை பெற்று தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்க வில்லை. சிவா கேட்டபோது பணம் தராமல் பல்வேறு காரணங்களை கூறி வினோத் தட்டி கழித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பேச வேண்டும் என கூறி சிவாவை நியூ சித்தாபுதூரில் உள்ள வினோத்தின் சகோதரி வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கே சென்ற சிவாவுக்கும், அவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வினோத், ராஜன் (42), முருகேசன் (25) உள்ளிட்ட சிலர் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி சிவாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், சிவா பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை நியூ சித்தாபுதூர் இளங்கோ நகரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளிகள் ராஜன், முருகேசன் ஆகிய இருவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், வினோத்தின் மனைவி நந்தினி (29) காட்டூர் போலீசில், எனது கணவரை சிவாவும், அவரது நண்பர் சேகரும் தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரில், சிவா, சேகர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: