எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான இடைக்கால தடை நீட்டிப்பு

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணை திட்டமிட்டப்படி டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் தேதி நடந்த விசாரணையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 30ம் தேதி ஒத்திவைத்திருந்தனர். ஆனால் விசாரணை பட்டியலில் டிசம்பர் 6ம் தேதி என விசாரணை என இருந்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் முறையிடப்பட்டது.

அவசர வழக்காக கருதியே விசாரணை 30ம் தேதி ஒத்திவைக்கப்பட்டதாகவும் வழக்கு விசாரணை தள்ளிப்போவதால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் கூறிய பழனிசாமி தரப்பு உடனடியாக நாளையோ அல்லது டிசம்பர் 6ம் தேதிக்கு முன்னதாகவோ விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரியுள்ளது. அப்போது குறிப்பிட்ட பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் டிசம்பர் 13ம் தேதி விசாரணையை தள்ளிவைக்க கோரினார். இரு தரப்பு கோரிக்கைகளையும் நிராகரித்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற அமர்வுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் டிசம்பர் 6ம் தேதி திட்டமிட்டபடி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான இடைக்கால தடை நீடிக்கிறது.

Related Stories: