தனியார் கட்டிடத்தில் இயங்கிவந்த மதுராந்தகம் மின்வாரிய ஆபீசுக்கு பூட்டு?.. ஆதார் எண் இணைப்பு பாதிப்பு

மதுராந்தகம்: தனியார் கட்டிடத்தில் இயங்கிவந்த மதுராந்தகம் மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டுப்போடப்பட்டுள்ளதால் மின் கட்டணம் மற்றும் மின்சார எண்  இணைப்புடன் ஆதார் எண் இணைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி தேரடி தெருவில் வாடகை கட்டிடத்தில் பல வருடங்களாக தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் அலுவலகத்தை காலிசெய்து வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் வேறிடத்தில் அலுவலகத்தை மாற்றுவதற்கும் இடம் தேடிக்கொண்டிருந்த நிலையில், மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை பகுதியில் மின்சார வாரியத்துக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் மின்வாரிய அலுவலகம் அந்த இடத்துக்கு மாற்றப்படவில்லை.

இந்தநிலையில், இன்று காலை ஊழியர்கள் வேலைக்கு வந்தபோது மின்சார வாரிய அலுவலகம் பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு அலுவலக வாசலில் ஊழியர்கள் அமர்ந்து இருந்தனர்.

இதனிடையே கட்டிடத்தின் உரிமையாளர்தான் மின்வாரிய அலுவலகத்தை பூட்டியிருக்கவேண்டும் என்று கருதி இதுசம்பந்தமாக மதுராந்தகம் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். மின்சார வாரிய அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின் கட்டணம் செலுத்துவது மற்றும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

Related Stories: