நெல்லை ஆட்டோ டிரைவர் கைது சென்னையில் புதிய கார்களை திருடி போலி ஆவணம் தயாரித்து விற்பனை: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலம்

நெல்லை: சென்னையில் புதிய கார்களை திருடி போலி ஆவணங்கள் தயாரித்து தென் மாவட்டங்களில் விற்ற நெல்லை ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.  அவரது கூட்டாளிகளை சென்னை தனிப்படையினர் தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக புதிய கார்கள் திருட்டு போனது. இதுகுறித்து தாம்பரம் மற்றும் ஆவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அப்பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நெல்லை சந்திப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து சென்னையில் கார்களை கடத்திய விவரம் தெரிய வந்தது.

இதனையடுத்து சென்னை தனிப்படையினர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் மற்றும் நெல்லை மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமாரை சந்தித்து கார் கடத்தல் கும்பல் குறித்து தெரிவித்தனர். பின்னர் நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், சந்திப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் மற்றும் போலீசாருடன் இணைந்து நேற்று அதிகாலை நெல்லையில் பதுங்கியிருந்த ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.

நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீசார் முதற்கட்டமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் கொண்ட கும்பல் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து நோட்டமிட்டு, சென்னை தாம்பரம், ஆவடி உள்ளிட்ட அங்குள்ள சில பகுதிகளில் புதிய கார்களை திருடியது தெரிய வந்தது. திருடிய கார்களுக்குரிய ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போன்று போலியாக தயாரித்து காருடன் தப்பித்து தென் மாவட்டங்களுக்கு வந்து விடுவர்.

பின்னர் திருடிய கார்களுடன் கோவை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கார்களை வாங்கி விற்கும் புரோக்கர்களை அணுகுவர். காரின் உரிமையாளர் அவசரமாக வெளிநாட்டில் வேலைக்கு  செல்வதாலும் செலவிற்கு பணம் அவசரமாக தேவைப்படுவதாலும், கார்களை குறைந்த விலைக்கு விற்கவுள்ளதாகவும், புரோக்கர்களுக்கு அதிகளவில் கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறுவர். இதனை நம்பி கார் வாங்க வருபவர்களிடம் இந்த கும்பல் அட்வான்சாக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் வாங்கிக் கொண்டு தப்பி விடுவர். இப்படியும் பலரை ஏமாற்றி வந்துள்ளனர்.

பின்னர் ஊருக்கு திரும்பும் கும்பல் அட்வான்ஸ் பெற்ற அதே கார்களை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் நல்ல விலைக்கு விற்று இரட்டிப்பு மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக இவர்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட கார்களை திருடி விற்பனை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களது கூட்டாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டால் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடி கும்பலிடம் இருந்து ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்ததும் ஆட்டோ டிைரவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரது கூட்டாளிகள் மேலும் 8 பேரை  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: