கேமிரா பதிவுகளோடு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் 150 லோடு மணல் அகற்றம்

நெல்லை:  நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் நேற்று கேமிரா பதிவுகளோடு சுமார் 150 லோடு மணல் அகற்றப்பட்டது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு ரூ.78.51 கோடி மதிப்பில் புதியதாக கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. அஸ்திவாரம் தோண்டிய போது தரமான ஆற்று மணல் டன் கணக்கில் வெளியேறியது. அதை அகற்றியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதனால் சந்திப்பு பஸ் நிலைய பணிகளும் மாதக்கணக்கில் முடக்கப்பட்டது. கோர்ட் வழக்கு மட்டுமின்றி, சிபிசிஐடி விசாரணையும் மணல் தொடர்பாக நடந்தது.

இந்நிலையில் பஸ் நிலையத்தின் உள்ளே குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. சுமார் 75 சதவீத பணிகள் நிறைவுபெற்ற நிலையில் வழக்கு காரணமாக பணி முடிந்த பகுதிகளில் பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பஸ் நிலைய வளாகத்தில் குன்றுபோல் குவிக்கப்பட்டுள்ள மணலை அகற்ற ஐகோர்ட் உத்தரவின்படி வக்கீல் கமிஷனர் வேலுச்சாமி மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மேலும் நெல்லை ஆர்டிஓ சந்திரசேகரன், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, கனிம வளத்துறை இணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் மணலை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோர்ட் உத்தரவுப்படி வக்கீல் கமிஷனர் வேலுசாமி முன்னிலையில் புதிய பஸ் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல் குவியல் லாரிகளில் அள்ளிச் செல்லப்பட்டது. அம்மணலை குவித்து வைக்க ராமையன்பட்டி உரக்கிடங்கில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு லாரியும் அங்கு சென்று மணலை கொட்டியது. நேற்று காலையில் தச்சை மண்டல உதவி கமிஷனர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் வருவாய்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னின்று ஜேசிபி உதவியோடு மணலை லாரிகளில் உரக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மணல் கொண்டு செல்லப்படும் காட்சிகள் கேமிராவில் பதிவு செய்யப்பட்டன.

நேற்று மாலை நிலவரப்படி சுமார் 7 லாரிகள் மூலம் 150 லோடு மணல் அகற்றப்பட்டுள்ளது. ராமையன்பட்டி உரக்கிடங்கிலும் வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னின்று லாரிகளில் வரும் மணலை இறக்க செய்து, அக்காட்சிகளை பதிவு செய்தனர். சந்திப்பு பஸ்நிலையத்தில் மணல் அள்ளும் பணி நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று பிற்பகல் 3 மணி வரை நடந்தது. பின்னர் 6 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நடந்தது. குன்று போல் குவிந்திருக்கும் மணல் முழுவதும் நாளைக்குள் அள்ளி ராமையன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு லாரியும் வக்கீல் கமிஷனரிடம் நடை சீட்டு பெற்ற பின்னரே வெளியில் அனுப்பப்பட்டது.

Related Stories: