அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வி; அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்: மீனவர் அமைப்பு அறிவிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அமைக்கப்பட்டு வரும் அதானி துறைமுகத்திற்கு எதிராக லத்தீன் கத்தோலிக்க சபையின் ஆதரவுடன் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக துறைமுகப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரை விடுவிக்கக் கோரி, நேற்று முன்தினம் மாலை விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட 36 போலீசார் காயமடைந்தனர். 4 போலீஸ் ஜீப்புகள் உள்பட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 2 கேரள அரசு பஸ்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக போலீசார் 3000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ₹ 85 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்று மாலை திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சியினரும், மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தவிர அனைத்து கட்சியினரும் வன்முறை சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் துறைமுகப் பணிகளுக்கும் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால்,மீனவர் சங்கப் பிரதிநிதிகளும், கத்தோலிக்க சபையினரும் அதானி துறைமுகத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் என்று கூட்டத்தில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதற்கிடையே நேற்று கேரள உயர்நீதிமன்றத்தில் அதானி குழுமம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்றது. பின்னர் விசாரணை வரும் டிச. 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories: