வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகளுக்கான மானிய நிலுவை ரூ.29.36 கோடி விடுவிப்பு: அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகளுக்கான மானிய நிலுவை ரூ.29.36 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரேஷன் கடைகளை நடத்துவதால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் செலவினங்களுக்காக ரூ.195.18 கோடி மானியத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடைகளை நடத்துகின்றன.

அவற்றில் பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகள் வாடகை, ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், போக்குவரத்து போன்றவற்றிற்காக ஏற்படும் செல்வினங்களுக்காக கூட்டுறவு சங்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.

அதன்படி, 2020-2021ம் ஆண்டுக்கு ரூ.480.18 கோடி வழங்க வேண்டியதில், இந்தாண்டு ஜூன் மாதத்தில் ரூ.150 கோடி விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, மீதியுள்ள மானிய நிலுவையில் ரூ.195.18 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மானிய தொகை மாநில தலைமை கூட்டுறவு வங்கி வாயிலாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்டு, கூட்டுறவு சங்களுக்கு பட்டுவாடா செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.29 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 717ஐ மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து சம்ந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு பட்டுவாடா செய்யப்பட உள்ளது. மானியம் நிலுவையை அரசு விடுவித்துள்ளதால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் கடை மானியம் 2020-21ம் ஆணடுக்கு 2 தவணையாக ரூ.345 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. அதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல் தவணையாக 7 கோடியே 32 லட்சமும், 2வது தவணையாக ரூ.8 கோடியே 69 லட்சத்து என மொத்தம் ரூ.16.1 கோடியும் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல் தவணையாக ரூ.5 கோடியே 94 லட்சமும், 2வது தவணையாக ரூ.7 கோடியே 39 லட்சமும் என மொத்தம் ரூ.13 கோடியே 43 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு 2வது தவனையாக ரூ.29.36 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது’ என்றனர்.

Related Stories: