பிஸ்கெட், ரஸ்க் பாக்கெட்டில் மறைத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு கஞ்சா கடத்திய மனைவி

புழல்: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு கஞ்சா கடத்திவந்த மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு சென்னை கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (28) அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், புருஷோத்தமனின் மனைவி ஆவடி அருகே உள்ள மோரை ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த சாவித்திரி (22) நேற்று சிறைக்கு கணவரை பார்க்க வந்துள்ளார்.

பின்னர் அவர் கணவரை சந்தித்து பேசிவிட்டு அவருக்கு தேவையான பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட பொருட்களை கொடுத்துவிட்டு சாவித்திரி அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதன்பிறகு அவர் மீது சிறை காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பொருட்களை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் 5 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து புழல் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ் கொடுத்த புகாரின்படி, புழல் போலீசார் விசாரணை நடத்தி கஞ்சா கடத்தி வந்த சாவித்திரி, அவரது கணவர் புருஷோத்தமன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பறிமுதல்

சென்னை புழல் மத்திய தண்டனை சிறை சுற்றுச்சுவர் உட்புறம் உள்ள 3வது கண்காணிப்பு கோபுரம் அருகில் சிறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள புதருக்குள் பிளாஸ்டிக் பை சுற்றப்பட்டு ஒரு பொட்டலம் கிடந்தது. அவற்றை போலீசார் எடுத்து பார்த்தபோது ஒரு செல்போன், ஒரு பேட்டரி, ஒரு சிம் கார்டு, ஒரு சார்ஜர் மற்றும் 100 கிராம் மூக்குப் பொடி ஆகியவை இருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக சிறை அலுவலர் இளங்கோ கொடுத்த புகாரின் அடிப்படையில், புழல் போலீசார் வழக்குபதிவு செய்து செல்போனை வீசி சென்றவர்கள் யார் என்று விசாரிக்கின்றனர்.

Related Stories: