சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரி விடுதி காப்பாளர்களுக்கு விருது: கலெக்டர் வழங்கினார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, கல்லூரி விடுதி காப்பாளர்களுக்கு பரிசு, விருது மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கினார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட 340 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு, முதல் இடம் பிடித்த அஞ்செட்டி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் முருகனுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை, இரண்டாம் இடம் பிடித்த பர்கூர் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் காப்பாளினி சந்திராவிற்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் மூன்றாம் இடம் பிடித்த போச்சம்பள்ளி அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதி காப்பாளினி லட்சுமிக்கு ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை, விருது, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, டிஆர்ஓ ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: