ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மின்சாரவாரியம் சுற்றறிக்கை

சென்னை: ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் நேற்று 28-11-22 முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 31-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பலர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள விடு, கைத்தறி, விசைத்தறி , குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது ஒன்றிய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.  

பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் பொது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கலகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் 31.12.2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. பண்டிகை தினங்கள் தவிர்த்து ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோரிடம் பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரவாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உத்தரவுப்படி அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மின்சாரவாரியம் கூறியுள்ளது.

இணைப்பு பணி நடைபெறும் பொது கணினியில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகள் தயாராக வைத்திருக்க வேண்டும்.  காலை 10.30 மணியில் இருந்து மாலை 05.15 மணி வரியா இடைவெளியின்றி பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் முக்கியத்துவத்தை பிளக்ஸ் போர்டு மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த நுகர்வோர்களின் எண்ணிக்கை 19,35,867, ஆன்லைன் மூலமாக இணைத்த நுகர்வோர்கள் 15, 98, 413, மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று இணைத்தவர்கள் 3, 37, 454 பேர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: