பிடிவாரன்ட் எதிரொலி, சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர்; ஜனவரி 3ல் மீண்டும் ஆஜராக உத்தரவு

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் கடந்த 2017ல் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு சேலம் ஒருங்கிணைந்த 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சீமான் நேற்று 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் தங்க கார்த்திகா முன் ஆஜரானார்.

இதையடுத்து அவர் மீதான பிடிவாரன்டை தளர்த்திய மாஜிஸ்திரேட், இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாகவும், வரும் ஜனவரி 3ம் தேதி அங்கு ஆஜராகும்படியும் உத்தரவிட்டார். வெளியே வந்த சீமான் கூறுகையில், மக்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்த போது, அதில் கையெழுத்து போடாமல் ஆளுநர் தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம். அறிஞர் அண்ணா சொன்னது போல நமக்கு ஆளுநரே வேண்டாம் என்பது தான் எங்களுடைய நிலைபாடு, என்றார்.

Related Stories: