சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை 4 வழிப்பாதையாக மாற்றம்; ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை 4 வழி பாதையாக விரிவாக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளார். இது குறித்து பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடப்பது குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க புறவழிச்சாலைகளை 4 வழிச் சாலைகளாக விரிவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 2ம் தேதி ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு அன்புமணி கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் நிதின் கட்கரி எழுதியுள்ள கடிதத்தில், ‘‘சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்காக பணி ஒப்பந்தத்தின்படி அந்த நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச்சாலைகளும், அதில் உள்ள கட்டமைப்புகளும் அந்த தேசிய நெடுஞ்சாலையை அமைத்த நிறுவனத்தால் 4 வழிச்சாலைகளாக விரிவாக்கப்படும்.  6 புறவழிச்சாலைகளை  விரிவாக்கும் பணி 2023 ஜூலைக்குள் முடிக்கப்பட வேண்டும்; மீதமுள்ள இரு புறவழிச்சாலைகளை விரிவாக்கும் பணி 2024 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: