முதல் கட்டமாக 89 தொகுதிகளில் டிச.1ல் வாக்குப்பதிவு குஜராத்தில் இன்று பிரசாரம் ஓய்கிறது: இறுதி கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிச.1,5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டமாக டிச.1ம் தேதி 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.  

இதை முன்னிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். பாவ்நகர் மாவட்டத்தில் பாலிட்டானா நகரில் பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் மீது அவர் கடும் விமர்சனத்தை முன்வைத்தார். அவர் பேசியதாவது: இந்தியாவை பிளவுப்படுத்தும் எந்த சக்திக்கும் உதவ குஜராத் மக்கள் எப்போதும் தயாராக இல்லை. எனவே காங்கிரஸ் கட்சி மக்களை பிரித்தாளும் கொள்கையை கைவிட வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கையால் குஜராத் மக்கள் ஏராளமான பாதிப்புகளை சந்தித்து விட்டார்கள். அதனால் தான் குஜராத் மக்கள் காங்கிரசை நிராகரித்து வருகிறார்கள். ஏனெனில் ஒரு பகுதி அல்லது சமூகத்திற்கு எதிராக தூண்டும் காங்கிரசின் கொள்கையால் ஏற்கனவே குஜராத் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் தான் குஜராத் மக்கள் நிரந்தரமாக காங்கிரசைபுறக்கணித்து விட்டார்கள். சவுராஷ்டிராவின் வறண்ட பகுதிக்கு நர்மதை நீர் வருவதை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. 40 ஆண்டுகளாக சர்தார் சரோவர் அணைத் திட்டத்தை முடக்குவதற்கு காரணமான ஒருவருடன்(மேதாபட்கர்) இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் இணைந்து நடந்ததை குஜராத் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

* 6 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியது ஏன்? கார்கே கேள்வி

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டார். கேடா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாநிலத்தின் வெற்றி தோல்விகள் குறித்து  மோடி  பேசினால் நல்லது. குஜராத் அரசு துறைகளில் 28,000 ஆசிரியர்கள் உட்பட 5 லட்சம் காலியிடங்கள் உள்ளன. மாநிலத்தின் கடன் ரூ.4.60 லட்சம் கோடியாக உயரப்போகிறது. அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்த குஜராத் மாடல் ஆட்சியில் தான் 4 லட்சம் பேர் கொரோனாவில் இறந்தார்கள். 6 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றினர். நீங்கள் 3 முதல்வர்களை மாற்றினால், நீங்கள் இங்கு எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம். குஜராத் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக மாறிவிட்டதை பா.ஜ. புரிந்து கொண்டுவிட்டது. அதனால் தான் பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர், நான்கு முதல் ஐந்து மாநில முதல்வர்களை பிரசாரத்திற்கு அழைத்துவர வேண்டிய கட்டாயம் பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: