அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சன் டி.வி. ரூ.2.93 கோடி நிதி உதவி

அரசுப் பள்ளிகளில் மாணவிகள் இடையிலேயே கல்வியைக் கைவிடும் நிலையைப் போக்குவதற்கான சூழலை உருவாக்க சன் டிவி 2 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகள் இல்லாததால் மாணவிகள் இடையிலேயே கல்வியைக் கைவிடும் நிலையைப் போக்கும் வகையில் அங்கு கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்காக சன் டிவி 2 கோடியே 92 லட்சத்து 67 ஆயிரத்து 175 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, க்ரை தொண்டு அமைப்பின் நிர்வாகிகளிடம் சன் டிவி சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார்.

சன் டிவி அளித்த நிதி உதவியின் மூலம், சென்னை, சேலம், தருமபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் 50 அரசுப் பள்ளிகளில் கழிவறைகளை மேம்படுத்துதல் மற்றும் நாப்கின் எரியூட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று க்ரை அமைப்பின் இணைப் பொது மேலாளர் ஹரி ஜெயகரன் தெரிவித்தார். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 168 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: