உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு குரங்கம்மை இனி எம்பாக்ஸ்

லண்டன்: குரங்கம்மை நோயை இனி ‘எம்பாக்ஸ்’ என குறிப்பிட வேண்டுமென புதிய பெயரை உலக சுகாதார நிறுவனம் சூட்டி உள்ளது. பொதுவாக ஆப்ரிக்க நாடுகளில் அதிகளவில் பரவும் குரங்கம்மை நோய், சமீபத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் வேகமாக பரவத் தொடங்கியது. இதுவரை இல்லாத அளவில் உலக அளவில் 80,000 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டனர். இதன் பரவலைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்டில் உலகளாவிய அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

பொதுவாக எந்த விலங்குகளிடம் இருந்த தொற்று பரவுகிறதோ அந்த நோய்க்கு சம்மந்தப்பட்ட விலங்கின் பெயர் சூட்டுவது வழக்கம். ஆனால், குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்து புதிய பெயரை சூட்ட முடிவு செய்தது. அதன்படி தற்போது எம்பாக்ஸ் (mpox) என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரை குரங்கம்மை என்ற பெயரும் பயன்படுத்தப்படும் என்றும் அதன்பிறகு எம்பாக்ஸ் என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் உலக சுகாதார நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு நோய்க்கு மறுபெயர் சூட்டப்பட்டிருப்பது இதுவே கிட்டத்தட்ட முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: