காங்கிரஸ் உறுப்பினர் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மீண்டும் இன்று கூடுகிறது: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது

சென்னை: காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்தின் மறைவையொட்டி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாமன்ற கூட்டம் மீண்டும் இன்று கூடுகிறது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நேற்று  மேயர் பிரியா தலைமையில் நடந்தது. இதில் கடந்த நவம்பர் 24 ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த 165வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினரும், தென்சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்துக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்த மேயர் பிரியாவை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மறைந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் குறித்து பேசினர். காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சிவராஜ் சேகரன் பேசியபோது, சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தூண்களில் ஒருவரை இழந்து விட்டோம். நாஞ்சில் பிரசாத் இழப்பு பேரிடியாக விழுந்து விட்டது என்றார். அவரை தொடர்ந்து, அதிமுக மாமன்ற உறுப்பினர் கே.பி.கே. சதீஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் கோபிநாத், திமுக மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் ராமசாமி மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசினர்.

மறைந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்றைய மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று காலை 10 மணிக்கு மாமன்றம் கூடும் என மேயர் பிரியா தெரிவித்தார். அதை தொடர்ந்து, இன்று கூடும் மாமன்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, கொடுங்கையூர் குப்பை கிடங்கை மேம்படுத்தவும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1000 பேருந்து நிறுத்தங்களை சீரமைக்கவும், மெரினா கடற்கரை பகுதியில் இலவச இணைய சேவை அமைப்பது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் பணிகளை சிறப்பாக கையாண்ட மாநகராட்சிக்கு வாழ்த்து தெரிவிக்கவும் கவுன்சிலர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: