தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை ஆப்ரிக்க குரங்கு குட்டிகள் பறிமுதல்: சென்னை பயணி கைது

சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பயணியை  கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது நஸ்ருதீன் (28) என்ற பயணி 2 பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தார். சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனையிட்டபோது, பிளாஸ்டிக் கூடைகளுக்குள், அபூர்வ வகை குரங்கினமான பிக்கி மர்மொசெட் மற்றும் டஸ்கி லீப் வகையைச் சேர்ந்த நான்கு குரங்கு குட்டிகள் இருந்தன. இவை ஆப்ரிக்க நாட்டு காட்டுப்பகுதிகளில் வசிப்பவை.

இதையடுத்து குரங்கு குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். சர்க்கஸ் கம்பெனிகளில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்ததாக அவர் சொன்னார். அதிர்ஷ்டம் தரும் என்ற நம்பிக்கை இருப்பதால் கோடீஸ்வரர்களும் இதை வாங்கி கூண்டில் வைத்து வளர்ப்பார்கள். அதனால் இதற்கு கிராக்கி அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். முறையான ஆவணங்கள் இன்றி விலங்குகளை கடத்தி வந்ததால் அவரை கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகளில் இரண்டு உயிரிழந்து கிடந்தது. செங்கல்பட்டில் மருத்துவக் கழிவுகளை அளிக்கும் தொழிற்சாலைக்கு இறந்த குரங்கு குட்டிகளின் உடல்களை கொண்டு சென்று, அங்கு பாய்லரில் போட்டு எரித்து சாம்பலாக்கினர்.  எஞ்சிய இரு குரங்கு குட்டிகளை விமானத்தில் திருப்பி அனுப்பினர்.

Related Stories: